Friday, 21 July 2017

தோடுடைய செவியன்



தோடுடைய செவியன்
(பேரா.ந.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை, ம.சு.பல்கலைக்கழகம்)
திருச்சிற்றம்பலம்

திருஞான சம்பந்தப் பெருமானின் முதல் தேவாரப்பாடல்

    அம்மையப்பனால் ஞானப்பால் ஊட்டப்பட்டு, சிவஞானம் அருளப்பெற்ற  ஞானக்குழந்தையான ஞானசம்பந்தர் "என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், அம்மை-அப்பனாக வந்த இறைவன்" என்று அவர்தம் தந்தைக்கு அடையாளம் காட்டி, நட்டபாடைப் பண்ணில் பாடிய முதல் தேவாரப் பதிகத்தின் முதல் பாடல் "தோடுடைய செவியன்" என்று தொடங்குகிறது:

தோடு உடைய செவியன் விடைஏறி ஓர் துவெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள் செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே! (தமிழ்மறை. 1.1)

(விடை-எருது(சிவபெருமானின் வாகனம்), மதி - நிலவு, சுடலைப் பொடி = சாம்பல், ஏடு உடைய மலரான் = பிரமன்)

இப்பாடலின் சிறப்பு, மூன்று வயதுக் குழந்தை பாடிய அருட்பாட்டு என்பது மட்டுமல்ல; 'தோடுடைய செவியன்' என்னும் இரு வார்த்தைகள், இறைவன் அம்மையப்பனாகத்தான் குழந்தைக்குக் காட்சி தந்தான் என்பதற்கான அகச்சான்று. குழந்தை கள்ளம், கபடம் அறியாதது; கண்டதையே சொல்லும். "யார் தந்த பாலைக்குடித்தாய்?" என்று தந்தை சிவபாதஇருதயர் கோபமாகக் கேட்கக், குழந்தை பால் தந்தவனின் அடையாளத்தைச் சொல்கிறது 'தோடுடைய செவியன்' என்று. அம்மையாகத் தோன்றியிருந்தால் காதுகளில் இரண்டு தோடுகள் இருந்திருக்கும்; அன்னையர் காதுகளில் தோடுகள் அணிந்திருப்பார்கள். எனவே, அது குறிப்பிட்டுச் சொல்லும் அடையாளமாக இருந்திருக்க முடியாது. இடப்பக்கம் அம்மை, வலப்பக்கம் அப்பன் என்று காட்சி தந்ததால், ஒரு காதில் மட்டும் தோடுடன் காணப்பட்ட அம்மையப்பனைத், 'தோடுடைய செவியன்' என்று புற அடையாளப்படுத்தியது சம்பந்தர்குழந்தை. சிவனடியார்களாகிய ஞானியரோ, 'தோடுடைய செவியன்' என்று ஞானசம்பந்தர், முழு முதற் கடவுளான சிவபெருமானின் பிரணவ ஞான அடையாளத்தைக் காட்டியதைக் கண்டுகொள்வார்கள். ஞானசம்பந்தரின் 'தோடுடைய(தோ = த்+ஓ) செவியன்'  என்னும் முதல் பாடல் இறைவனின் பிரணவ வடிவான ஓங்காரத்துடன் தொடங்குகின்றது.

இறைமறுப்புக் கொள்கையுடன் சமண சமயத்தில் உறைந்திருந்த திருநாவுக்கரசர் பெருமானை, அவர்தம் சகோதரியார் திலகவதி அம்மையின் வழிபாட்டுக்கிணங்கி, சூலைநோய் கொடுத்து ஆட்கொண்டார் சிவபெருமான். திருநாவுக்கரசர் பெருமானின் முதல் தேவாரம் சூலைநோய் நீங்க வேண்டும் பாடலாகும்.

"வீரட்டானத்து அம்மானே! யமன் போன்ற இந்தச் சூலைநோயை அகற்றிவிடும். என் குடல்களை முறுக்கி முடக்கி என்னைத் துன்புறுத்துகிறது. என்னால் தாங்க முடியவில்லையே! அறியாமல் பிழை செய்தேன். இரவும் பகலும் உமது திருவடிகளைப் பிரியாமல் வணங்குவேன். இந்த நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுவீர்!" என்று முறையிட்டார் அப்பர் பெருமான்.

பண்: கொல்லி
கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
     கொடுமை பல செய்தன நானறியேன்,
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
     பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
     குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
     வீரட்டானத்து உறை அம்மானே! (தமிழ்மறை, 4.1)

(கூற்றாயினவாறு = கூற்றுவனைப் போல (கூற்று = யமன்), தோற்றாது = நோய் முதல் புலப்படாது, அகம்படியே = உள் உறுப்புகளையே, துடக்கி முடக்கியிட = செயல்படாமல் முடக்குதலால்)

திருநாவுக்கரசர் பெருமானின் முதல் தேவாரத்தின் முதல்வரி, சூலை நோயின் கொடுமையை நீக்க விண்ணப்பிக்கும் இரு வார்த்தைகளும் (கூற்றாயினவாறு விலக்ககிலீர்!), தாம் இறைவனை இகழ்ந்த கொடுமைகள் தம் அறியாமையினால் நடந்ததென விண்ணப்பிக்கும் நான்கு வார்த்தைகளும் (கொடுமை பல செய்தன நானறியேன்,) கொண்டு அமைந்தன.  இரண்டாவது வரியில்தான் 'ஓம்' என்னும் பிரணவ ஒலியின் மூலஎழுத்துக்களான  'அ', 'உ', 'ம்' அமைந்தன. (ஏற்றாயடிக்கே இரவும் பகலும் (இர்வ்உம் பக்ல்உம்) பிரியாது வணங்குவன் எப்பொழுதும்).
'ஓம்' என்னும் பிரணவம் 'அ', 'உ', 'ம்' என்னும் மூன்று உயிரெழுத்துக்களின் கூட்டு ஒலியாகும்.


இறைவனை அடையாளம் தெரியாமல்  'பித்தன்' என்று வசைபாடிய வன்தொண்டர் சுந்தமூர்த்தி நாயனாருக்கு, "எம்மைச் சொற்றமிழால் 'பித்தா' என்றே பாடுக", என்று முதற்சொல் எடுத்துக் கொடுத்தான் இறைவன்.

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்
                                  அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. (தமிழ்மறை. 7.225)

"பித்தா! பிறைசூடி! பெருமானே அருளாளா!" என்ற வரியில் 'பெருமானே அருளாளா!' என்னும் இரு வார்த்தைகளில் 'அ', 'உ', 'ம்' என்னும் பிரணவ ஒலியின் மூலஎழுத்துக்கள்  அமைந்தன.

சேக்கிழார் பெருமான் எழுதிய, அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்துக்கு இறைவன் மனமுவந்து 'உலகெலாம்' என்னும் முதல் வார்த்தை எடுத்துக் கொடுத்தான்.

உலகவர் தம் அறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன் இறைவன்; அறிவதற்கு அரியவனாய் இருந்தாலும், உயிர்கள் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து, பல்லுயிர்களையும் காக்கும் அளவிட இயலாத ஒளியினை உடையவனாக விளங்குகிறான். இத்துணைப் பெருமையோடு தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்ற கூத்தப் பெருமானின் மலர்சிலம்புத் திருவடிகளை வாழ்த்தி வணங்குவோம் என்று பாடலை நிறைவு செய்கின்றார் சேக்கிழார் பெருமான்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் - சேக்கிழார்.

இறைவனின் தேர்வாக எடுத்துக் கொடுத்த 'உலகெலாம்' என்னும் வார்த்தையிலேயே 'ஓம்' என்னும் பிரணவத்தின் 'அ', 'உ', 'ம்' என்னும் மூன்று எழுத்துக்களும் அமைந்துவிட்டமை சிவனருள். சிவன் கழலே சிந்தித்து, சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

திருச்சிற்றம்பலம்.