Monday, 8 August 2016

அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்

அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்
பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், .சு.பல்கலைக்கழகம்
நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே. மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.
(தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள் சிவப்புவண்ணத்தில் தரப்பட்டுள்ளன.)
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.
பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்
என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.
இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம்பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.
தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
இந்த வரிகளில் உயர்வு நவிற்சியாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா? எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! பின் ஏன் நீக்கினார்கள்? உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? குழம்பத் தேவையில்லை! நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ?  தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்
தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா? விட்டுவிட வேண்டியதுதானே! அதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது. அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக,  போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?
திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும்துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்?  பின் என் நீக்கினார்கள்? தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து
தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள்?  தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..
பேசாப் பொருளைப் பேச . . .
முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின்  ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.
கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது
கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!
“முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!!” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை! வியந்தல்லாவா போகிறோம் நாம்?
தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது!
ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.
பாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து  நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை  பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.
தமிழ்மொழி உலகின்மொழிதோற்றநாசம் அற்ற முதுமொழி!! 
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
நம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.
காலத்தை வென்றவள் எம்தமிழன்னைவைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.
தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;
அஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.
இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.
சம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.
  1. இது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.
  2. இந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.
  3. சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.
  4. இவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
  5. முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.
அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம்,  உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம்,  உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு.  இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.
மெய்யுணர்வினும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு!
ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு! வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு!
இறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக்கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே! எம் மொழிக்கும் கிட்டாத மேன்மைஆயின்தமிழன்றோ இறைமொழி?
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.
‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற  அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.
இங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா?
இத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி! கடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா? அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?
சங்கப் பலகை – தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று 
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.
தகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.
வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
 பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.
ஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் – ஒருகுலத்துக்கு ஒரு நீதி குறள் நீதியும் மநுநீதியும்  
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
அனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே! அவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.
திருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர்.  மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.
இறுதியாக,
மலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்? இச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:
நிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்
ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்
மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்
வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறு விரல் அணியாக்
கொள் மதியன்பே குறியெனக் குறித்தே.
-மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
நிறைவாக,
யாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)
பெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா? நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே! தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு!!
தமிழால் இணைவோம்! தமிழாய் வாழ்வோம்!!

தில்லை காட்டும் சைவசமயாசிரியர் நால்வர்களின் காலச்சுவடுகள்

தில்லை காட்டும் சைவசமயாசிரியர் நால்வர்களின் காலச்சுவடுகள்
-பேரா.முனைவர். ந. கிருஷ்ணன்

தில்லை – பக்தி எழுச்சி வரலாற்றின் மொகஞ்சதாரோ!
தில்லை பக்தி எழுச்சி வரலாற்றின் மிகமுக்கியமான சான்றுகளைப் பட்டியலிடும் தமிழக மொகஞ்சதாரோ. தமிழர்களின் போதாத காலமோ என்னவோ, இவ்வூர் தரும் இலக்கியச் சான்றுகள் அறிவியல்ரீதியாகக் கருதப்படாததால், தமிழிலக்கிய வரலாற்றின், குறிப்பாகச் சைவ இலக்கிய வரலாற்றின் தடங்கள் முரண்பாடுகளின் குவியலாகவே இன்றுவரை காணக்கிடக்கின்றன. கடல் நிலவியல்ரீதியாக கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தில்லையில் நிகழ்ந்த மாற்றங்கள் நமக்குத்தரும் செய்திகளைத் தொகுப்பதும், அதன்வழி சைவஇலக்கிய வரலாற்றை மீள்வாசிப்பு செய்வதுவும் இக்கட்டுரையின் நோக்கம்.
தில்லை என்னும் சிதம்பரம் இந்திய வரைபடத்தில் 11.39°N 79.69°E ஆக அமைந்துள்ளது. தில்லை நகர் தமிழகத்தின் வட மாவட்டமான கடலூரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ. வான்வழித் தொலைவிலும், சாலை வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத் தில்லை. ஏறத்தாழ சமவெளியில் அமைந்துள்ள இந்நகரைச்சுற்றிக் காடுகள், குறிப்பாகத் தில்லைவனக் காடுகள் காணப்படுகின்றன. சிவப்பு மற்றும் வண்டல் மண்வகைகள் நெல் போன்ற செழிப்பான பயிர்கள் விளைய காரணமாகும்.
தில்லை என்பது ஒரு மரம் – சிதம்பரம் கோயிலின் தல விருட்சம் – தலத்தின் புனித மரம்
முற்காலச் சிவன் திருக்கோயில் கடல்சூழ்ந்து தில்லை மரங்கள் நிறைந்த பெரும்பகுதி காடாக இருந்தது (Mangrove of ancient Tillai trees Exocoeria agallocha). அதன் காரணமாக, இத்தலத்தைத் ‘தில்லைவனம்’ என்றும் அழைத்தனர் பண்டைத் தமிழர். நாளடைவில் அப்பெயர் தில்லை என்றும், தில்லையம்பதி என்றும் மாறியது. இத் தலத்தின் புனித மரம் – தல விருட்சம் தில்லை மரமேயாகும். அதன் காரணமாகவே, சேந்தனார், “மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர் போயகல!” என்று பாடியுள்ளார். காலப்போக்கில், கடல் தில்லையிலிருந்து விலகிக் கழிசூழ்ந்து விளங்கி, பின் அதுவும் நீங்கிச் சென்றது. தில்லையை அடுத்துப் பத்துக் கிலோமீட்டர் (சாலை வழியாகப் பதினைந்து கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் (உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்) தில்லைமரங்கள் நிறைந்து காணப்படுவதை இன்றும் காணலாம்.
இதில் என்ன பெரிய செய்தி என்று கேட்கிறீர்களா? தில்லை ஒருகாலத்தில் கடல்சூழ்ந்து இருந்ததும், பின் கடல் பின்வாங்கிக் உப்பங்கழிசூழ்ந்து இருந்ததும், தற்போது உப்பங்கழியும் பின்வாங்கிப் ‘பிச்சாவரம் சதுப்புநிலத் தில்லைமரக் காடுகளாக’க் காட்சியளிப்பதில் என்ன பெரிய செய்தி இருந்துவிடப் போகிறது என்று சலிப்படைய வேண்டாம். தற்போது நம்முன் உள்ள கேள்வி
  1. தில்லையைக் கடல் சூழ்ந்திருந்தது எக்கால கட்டத்தில்? இலக்கியச் சான்று உண்டா?
  2. தில்லையைக் கழி சூழ்ந்திருந்தது எக்கால கட்டத்தில்? இலக்கியச் சான்று உண்டா?
தில்லையைப் பண்டையக்காலத்தில் கடல் சூழ்ந்திருந்ததா அல்லது கழி சூழ்ந்திருந்ததா என அறிவியலாளர்களைக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைத் தருகின்றனர். செயற்கைக்கோள் படங்கள் அக்கால கட்டங்களில் இல்லாமையால், அவர்களால் திட்டமாகக்கூற இயலாமை புரிந்துகொள்ளக் கூடியதே.
கவிஞர்களே காலக் கண்ணாடி!
கவிஞன் எப்போதும் ஒரு காலத்தின் கண்ணாடியாயிற்றே. எனவே, இலக்கியச் சான்று தேடிச் செல்லலாம். உதாரணமாக, 1995ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகமான ‘பேஜர்’ என்னும் செய்தி அனுப்பும் கருவி 2001இல் காணாமல் போனது. பேஜர்’ செய்தி அனுப்பும் கருவியைக் குறித்த பதிவுகளை அக்காலகட்டத்தில் வந்த திரைப்படப் பாடலாசிரியர்கள் பாடியுள்ளனர். காட்டாக, 1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘செல்வா’ என்ற திரைப்படத்துக்காக சினிமாக் கவிஞர் வாலி எழுதிய கீழ்க்கண்ட பாடலில் ‘பேஜர்’ என்ற தகவல்தொடர்புக் கருவியைக் குறித்த பதிவு காணக்கிடக்கின்றது.
ஏ லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு டப்புன்னு
லெவல்லா அடிக்குது ஹார்ட் பீட்டு
………….
பேஜர் உந்தன் கண்ணில் இருக்கு
அதில் மேஜரான மேட்டர் இருக்கு
………
இப்பாடல் சிற்பியின் இசையில் சுரேஷ் பீட்டர், ஸ்வர்ணலதா, தீபிகா குழுவினரால் பாடப்பட்டுள்ளது. ஒரு இடத்தின் இயற்கை அழகாகட்டும், செழிப்பாகட்டும், வளர்ச்சியாகட்டும், அக்காலக் கவிஞனின் கவிதைப் பதிவுகளில் பதிக்கப்பட்டிருக்கும். நாட்டின் கவிஞர்கள் எப்போதுமே நம்பிக்கைக்குரிய ஆவணப் பதிவர்கள். ஏனெனில், இலக்கியப் பதிவுகள் கவிஞனின் உள்ளத்தூறும் உண்மையின் அழகான வெளிப்பாடுகள். அங்கு, பொய்ம்மைகளுக்கு இடமேயில்லை. எனவே, நாம் தில்லை நகரைக் குறித்த காலப்பதிவுகளுக்காக, பரமனையே பாடிய சைவ சமயக்குரவர்கள் நால்வர் தந்த முதல் எட்டுத் திருமுறை இலக்கியங்களையே மீள்வாசிப்பு செய்யலாம்.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், திருஞான சம்பந்தர் காலத்தில் தில்லை நகரை ஒரு பக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன. 
முதலில், முதல் மூன்று திருமுறைகளையும் தந்த நான்மறை நற்றமிழ் திருஞான சம்பந்தப் பெருமானிடம் செல்வோம்.
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்

செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. (திருஞானசம்பந்தர் 1ஆம்திருமுறை.கோயில்.3.)
மைதீட்டப்பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடைய உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத அறமுதலான மறைப்பாடல்களைப் புரிந்த சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும்.
இப்பாடலில், தில்லையை ‘உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள்’ என்னும் பொருளில் ‘கழிசூழ் தில்லையுள்’ என்று பெருமான் பாடியுள்ளார். எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டில் தில்லையை ஒரு பக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன என்பது தெளிவு.
அடுத்ததாக, நான்கு முதல் ஆறாம் திருமுறைகளை அருளிய அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பெருமானிடம் செல்லலாம். அப்பர்பெருமான் தில்லை கூத்தபெருமானைத் திருமுறைகளுக்கு இரண்டு வீதம் மொத்தம் 6 பதிகங்களில் சுமார் அறுபது பாடல்களில் பாடித் துதித்துள்ளார்.
இவற்றுள், நான்காம் திருமுறையின் 22ஆம் பதிகத்தின் 1-3 பாடல்களில் முறையே ‘மஞ்சடை சோலைத் தில்லை’, ‘நாறுபூஞ் சோலைத் தில்லை’, ‘நாறுபூஞ் சோலைத் தில்லை’ எனத்தில்லையின் வளமிக்க சோலைகளை ஒவ்வொரு பாட்டின் மூன்றாம் வரியில் சிறப்பிக்கின்றார்.
நான்காம் திருமுறையின் 22ஆம் பதிகத்தின்  4ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘நன்செய்வயலிலே தானியங்கள் அறுவடையாகும் தில்லை’ எனப் பொருள்படும் ‘செய்யரி தில்லை’ எனவும், 8ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘பாசனத்துக்காக நீர்தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே’எனப் பொருள்படும் ‘சிறைகொள் நீர்த் தில்லை’ எனவும், ஐந்தாம் திருமுறையின் 2ஆம் பதிகத்தின் 10ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனை’ என்றும்  தில்லையின் வயல் வளத்தைப் பாடியுள்ளார். ஆறாம் திருமுறையில் தில்லைவளம் குறிக்கப்படவில்லை.
அப்பர் பெருமான், ஞானசம்பந்தருக்குச் சமகாலத்தவராதலால், இருவரின் கருத்துக்களையும் ஒன்றுசேர நோக்கினால், தில்லை அவர்கள் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டு காலத்தில், ஒருபக்கம் உப்பங்கழியாலும், மற்றபக்கங்களில் வயல்களாலும், சோலைகளாலும் சூழப்பட்டிருந்தது என்ற செய்தியைப் பெறுகின்றோம்.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல்களில் தில்லையின் கடல் நிலவியல் குறித்த செய்தியில்லை.
எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறையின் 90ஆவது பதிகமான கோயில் பதிகத்திலே “பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே” என்று மட்டுமே அனைத்துப் பாடல்களிலும் பதிவிடப்பட்டுள்ளதே தவிர தில்லைவளம் கூறப்படவில்லை. எனவே, தில்லையின் கடல் நிலவியல் குறித்த செய்தி எதுவும் கிடைக்கவில்லை.
ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனத் தமிழியல் ஆய்வர்களால் கருதப்படும் மாணிக்கவாசகப்பெருமானின் திருவாசகத்தில் தில்லைவளம் குறித்த செய்திகள் குறைவு.
ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப் பெரும்பான்மைத் தமிழியல் ஆய்வர்களால் கருதப்படும் எட்டாம் திருமுறை தந்த மாணிக்கவாசகப்பெருமானின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றுள், தில்லைவளம் குறித்த செய்திகள் திருவாசகத்தில் சற்றுக் குறைவாகவே கிடைக்கின்றன.
குலம்பாடிக் கொக்கிறகும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்டவாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
 – திருவாசகம்:11.20
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ
 – திருவாசகம்:13.1
படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ
 – திருவாசகம்:13.14
பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே
 – திருவாசகம்:31.6
மேலே குறிப்பிட்ட நான்கு பாடல்களில், திருவாசத்தின் திருத்தெள்ளேணம் பதிகத்தின் 20ஆம் பாடல் கடல் நீரலைகள் ஓசைஎழுப்புகின்ற தில்லை அம்பலத்தே ஆடுகின்ற எனப் பொருள்படும் “அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற” என்ற வரியில் தில்லை அம்பலம் கடற்கரையில் அமைந்துள்ளதைப் பதிவுசெய்துள்ளது.
திருவாசத்தின் திருப்பூவல்லி பதிகத்தின் 1ஆம் பாடல் “அணையார் புனல்தில்லை” என்று பதிவிட்டதன் மூலம் தில்லையின் வயல்வளத்தையும், 14ஆம் பாடல்  “தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா” என்று பதிவிட்டதன் மூலம் தில்லைக் கோயில் பெரிய மதில்களைக் கொண்டிருந்தமையையும் பதிவுசெய்துள்ளது.
திருவாசத்தின் கண்டபத்து பதிகத்தின் 6ஆம் பாடல் “செறிபொழில்சூழ் தில்லைநகர்” என்று பதிவிட்டதன் மூலம் தில்லையின் பொழில் சூழ்ந்த சோலைவளத்தையும் பதிவுசெய்துள்ளது.
ஆக, மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைக் கோயில் பெரிய மதில்களை உடையதாய் கடற்கரையில் அமைந்துள்ளமையும், தில்லை ஊர் வயலும் சோலைகளும் நிறைந்து செழிப்பாக இருந்தமையும் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து பெறப்படுகின்றது. எனினும், “அலம்பார் புனல் தில்லை” கடல் நீரலை ஓசையைக் குறித்ததா அல்லது வயல்களில் தளும்பும் நீரலையோசையைக் குறித்ததா என்ற ஐயம் எழாமலும் இல்லை. எனவே, மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையார்’ படைப்பையும் ஆய்ந்து பார்க்காமல் தில்லை அவர் காலத்தில் கடற்கரையில் அமைந்திருந்தது என்று முடிவுக்கு வர இயலாது.
ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டின் கருதப்படும் மாணிக்கவாசகப்பெருமானின் திருகோவையாரில் கடற்கரைக் கோயிலாகத் தில்லை கூறப்பட்டுள்ளது.
நானூறு பாடல்களைக் கொண்ட திருக்கோவையாருள், 20, 49, 85, 122, 147, 182, 183, 222 எண்ணுடைய எட்டுப் பாடல்களில் தில்லைவளம் குறித்த வலுவான செய்திகள் காணக் கிடக்கின்றன.
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்குஎன் கொலாம்புகுந்து எய்தியதே” – திருக்கோவை 20
என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே
 – திருக்கோவை 49
சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மாவங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே  – திருக்கோவை – 85.
அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே  – திருக்கோவை – 122.
ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந் தளர்ந்தனை நன்னெஞ்சமே 1– திருக்கோவை – 147.
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்தார்க்குஞ் செறிகடலே – திருக்கோவை – 182.
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே – திருக்கோவை – 183.
மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்

மன்போல் பிறைஅணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
நின்போல்நடை அன்னம்துன்னிமுன்தோன்றும்நன் நீள்நகரே – திருக்கோவை – 222.
பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே  – திருக்கோவை – 317.
கடலலைகளைச் சிறைவத்துள்ள சிற்றம்பலம்: 
மேற்கண்ட ஒன்பது பாடல்களில், முதலாவதாகக் குறிக்கப்பட்ட திருக்கோவையின் இருபதாவது பாடல் “சிறை வான்புனல் தில்லைச் சிற்றம்பலத்தும்” என ‘வானுயர ஆர்த்துஎழும் கடலலைகளைச்    சிறைவத்துள்ள சிற்றம்பலத்தில் உறையும்” என்று கூறுகின்றது.
கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடல்:
அடுத்ததாக வரும் திருக்கோவையின் நாற்பத்தொன்பதாவது பாடல் “மின் எறி செஞ்சடைக் கூத்தப்பிரான் வியன்தில்லை முந்நீர்” என “மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடல்” என்று சொல்கிறது. (கடலைக் குறிக்கும் முந்நீர் என்னும் சொல் சங்ககாலம் தொட்டுத் தமிழில் வழங்கி வருகின்றது. காட்டாக, “திரை பொரு முந்நீர்க் கடல்” -புறநானூறு:154 “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி” -புறநானூறு:66, முந்நீர் தரும் உப்பை அமிழ்தம் என்னும் பொருளில் “முந்நீர் பயந்த … வெண்கல் அமிழ்தம்” -அகநானூறு 207, முந்நீரில் செல்வோர் மகளிருடன் செல்வதில்லை என்ற கருத்தில் “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”-தொல்காப்பியம்:3-37-1, முந்நீர் வண்ணம் கொண்ட திருமாலைப் போன்ற பிறங்கடை என்னும் பொருளில் “முந்நீர் வண்ணன் பிறங்கடை (தொண்டைமான்)” -பெரும்பாணாற்றுப்படை:30,  முந்நீரில் செல்லும் கப்பல்களைக் காற்று கவிழ்க்கும் என்னும் பொருளில் “நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்” –கலித்தொகை:5,  வெண்திரை முந்நீர் வளைஇய உலகம் -பதிற்றுப்பத்து:31)
மாவங்கக் கடல் சூழ்ந்த தில்லைக் கூத்தபிரான்: 
திருக்கோவையின் எண்பத்தைந்தாவது பாடலோ “மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே” என மாவங்கக் கடல் சூழ்ந்த தில்லைக் கூத்தபிரான் நேர் தோன்றி வருவதாகக் கூறுகிறது. திருக்கோவையின் 122வது பாடலோ “கடல் தில்லை அன்னாய் கலங்கல் தெளி” என வெளிப்படையாகவே தில்லையைக் கடல் சூழ்ந்திருந்த செய்தியைத் தெரிவிக்கிறது.
தில்லைச் சிற்றம்பலம் கடல்சூழ விளங்கியதைக் காட்டும் பிற கோவைப் பாடல்கள்:
தில்லைச் சிற்றம்பலம் கடல்சூழ விளங்கியதை “ஆனந்த மாக்கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன” என்று திருக்கோவை – 147ஆவது பாடலும், “புலியூர்ப் புனிதன் சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்து ஆர்க்கும் செறிகடலே” என்று  திருக்கோவை – 182ஆவது பாடலும், “பூணிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே” என்று திருக்கோவை – 183ஆவது பாடலும், “மின்போல் கொடி நெடுவானக் கடலுள் திரைவிரிப்ப” என்று  திருக்கோவை – 222ஆவது பாடலும் விளங்கத் தெரிவிக்கின்றன. “பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்” என்று திருக்கோவை – 317ஆவது பாடல் தில்லைநகர் காவிரி நதியால் வளம் பெற்றதையும் தெரிவிக்கிறது.
எனவே, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தர், அப்பர் பாடல்களிலிருந்து பெறப்படும்அகச்சான்றுகளிலிருந்து, வயல்களாலும், சோலைப் பொழில்களாலும் வளம்பெற்ற தில்லை, ஒருபுறம்உப்பங்கழிகளால் சூழப்பெற்றிருந்தமை பெறப்படுகின்றது.
ஆனால், ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பெரும்பான்மையான தமிழாய்வர்களால் துணியப்பட்ட மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையாரிலிருந்து பெறப்படும் அகச்சான்றுகளிலிருந்து வயல்களாலும், சோலை போழில்களாலும் வளம் பெற்ற தில்லைஒருபுறம் வங்கமாக் கடலால் சூழப்பெற்றிருந்தமை பெறப்படுகின்றது. 
கடல் சூழப்பட்ட காலமே கழி சூழப்பட்ட காலத்திற்கு முன் இருத்தல் வேண்டும் என்பது கடல் நிலவியலின் அடிப்படை உண்மை.
பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம்வரை நாம் காணும் தில்லைநகர் மற்றும் தில்லைக்கோவில் மாட மாளிகைகளால் சூழப்பட்டு, கடலோ, உப்பங்கழியோ சூழப்படாமல் கடலிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 
கடல் நிலவியல்ரீதியாக (marine geology), கடல் சூழ்ந்த நிலப்பகுதியே கால ஓட்டத்தில் கடல் விலகிச் செல்லும் காரணத்தால் Backwater எனப்படும் உப்பங்கழிகளால் சூழப்பட்டு, தொடரும் கடல் விலகிச்செல்லும் நிகழ்வால், உப்பங்கழிகளும் நிலப்பகுதியாக மாறுகின்றன. தில்லைநகர் தற்போது கடலோ, உப்பங்கழியோ சூழப்படாது, கடலிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளதை ஒப்புநோக்கினால், கடல் சூழப்பட்ட காலமே கழி சூழப்பட்ட காலத்திற்கு முன் இருத்தல் வேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றுசேரப் பார்க்கும்போது, ஏழாம் நூற்றாண்டில் தில்லை கழியால் சூழப்பட்டிருந்தது என்ற அகச்சான்று சம்பந்தப் பெருமானின் பாடல்களிலிருந்து பெறப்படுவதால், தில்லை கடலால் சூழப்பட்டிருந்தது என்ற அகச்சான்று பெறப்பட்ட திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாடல்கள் குறைந்தஅளவு ஏழாம் நூற்றாண்டுக்கு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்காவது முன்பே படைக்கப்பட்டிருக்க வேண்டும்  என்பது  உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாக விளங்கும்.        
மூவர் தேவாரங்களிலும் காணப்படும் விநாயகப் பெருமான் வழிபாடு திருவாசகத்தில் இல்லை.
மேலும், விநாயகப் பெருமான் வழிபாடு மூவர் தேவாரங்களிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ விநாயகப்பெருமானைக் குறித்த பதிவுகள் முற்றிலும் இல்லை.
முருகப்பெருமானைக் குறித்த பதிவுகள் திருவாசத்தில் காணக்கிடக்கின்றன. காட்டாக, திருவாசத்தில் முருகப்பெருமானைக் குறித்த சில சொல்லாடல்கள் தரப்பட்டுள்ளன.
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடயற்கே உந்தீபற  குமரன்தன் தாதைக்கே உந்தீபறதிருவாசகம்:திருவுந்தியார்:17 
அந்தரர் கோன் அயன்தன் பெருமான் ஆழியான் நாதன் நல்வேலன் தாதைஎந்தரம் ஆளுமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே
  • திருவாசகம்:திருப்பொற்சுண்ணம்:3 
குமரக்கடவுளைக் குறித்த மணிவாசகர், குமரனின் மூத்தவர் விநாயகப்பெருமானைத் தன் பாடல்களில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதிலிருந்து, மாணிக்கவாசகரின் காலத்தைய தமிழகத்தில் விநாயகவழிபாடு இல்லாமல் இருந்தது என்பது மிகத்தெளிவு.
விநாயகர் வழிபாடு தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லை என்பதால், மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் முந்தையதும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையதும் என்பதற்கு இது இன்னுமொரு வலுவான சான்று.
முதலாவது வரகுணனா அல்லது இரண்டாவது வரகுணனா என்ற ஆய்வுப் பட்டிமன்றங்கள்:
ஆனால், இதுகாறும் தமிழிலக்கிய வரலாறு எழுதிய தமிழியல் ஆய்வர்கள் மாணிக்கவாசகர் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ள வரகுணப்பாண்டியன் முதலாவது வரகுணனா அல்லது இரண்டாவது வரகுணனா என்று ஆய்வுப் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி, இரண்டாவது வரகுணனே என்று முடிவுகட்டி, மாணிக்கவாசகரின் காலத்தை எட்டாவது நூற்றாண்டிற்குப் பின்கொண்டு சென்றுவிட்டனர். ஒரு மன்னனின் பெயரை அவன் மகன்வழிப் பெயரனோ, மகள்வழிப் பெயரனோ பெறுவது தமிழ்க்குடிகளில் இன்றும் நாம் காணும் தொன்மப் பண்பாட்டு நிகழ்வுகள். வரலாற்று ஆய்வுநெறி முறைகள் அடிப்படையில் நோக்கினால், சிதம்பரம் நடராசப்பெருமான் கோயில், திருச்செந்தூர் முருகப்பெருமானின் கோயிலைப்போலக் கடற்கரைக் கோயிலாக மாணிக்கவாசகரின் காலத்தில் விளங்கியது என்பதை விளக்கும்திருக்கோவையாரின் ‘கடல்சூழ்ந்த தில்லை’ பதிவுகளும், மற்றும் விநாயகப் பெருமான் வழிபாட்டுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவர் மாணிக்கவாசகர் ஆகிய வலுவான சான்றுகளை ஒப்பிடும்போது, வரகுணன் என்ற பெயர்கொண்ட மன்னர்கள் காலத்தையும் மாணிக்கவாசகரின் காலத்தையும் ஒப்பிடும் வாதம் மிகமிக வலுவற்றது என்பது தெளிவாக விளங்கும். எனவே, மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதி.
தமிழிலக்கிய வரலாறு இவ்வாறு முரண்களின் மூட்டையானதன் காரணம்: 
தமிழிலக்கிய வரலாறு, ஆய்வு நெறிகளைப் பின்பற்றாமல், கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன்னார் இவ்வாறு கூறிவிட்டமையால், அது அவ்வாறே இருத்தல் வேண்டும் என்ற ‘பெரியோர் உரை அளவு’ ஒன்றையே பெரும்பான்மை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் புதினங்களாகவே உள்ளன. விதிவிலக்காக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், கா.சு.பிள்ளை, பரிதிமாற்கலைஞர், தேவநேயப்பாவாணர் போன்ற அறிஞர்கள் நம்மிடையே தோன்றினர் எனினும், அவர்கள் எடுத்துக்கொண்ட பரந்துபட்ட தமிழாய்வுத் தளங்களை நோக்கும்போது, தில்லை அதற்குரிய இடத்தைப்பெறவில்லை என்பது தமிழர்களாகிய நாம் செய்த தவக்குறைவே. மேலும், அவர்தம் காலத்திலேயே, பல்கலைக்கழகங்களிலும், தமிழாய்வு மையங்களிலும் அமர்ந்திருந்த பிற தமிழியல் ஆய்வாளர்கள் இவ்வறிஞர்கள்பால் கொண்ட தனித்தமிழ் உள்ளிட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, “பெரும்மொழிப்பற்றின் காரணமாகக் கூறியவையேயன்றி ஏற்புடையவையன்று (far fetched thoughts due to Tamil affinity)” என்று முத்திரை குத்தி அவர்தம் கருத்தாய்வுகள் உலக அரங்கில் சென்றடையா வண்ணம் செய்துவிட்டனர். ‘(எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளுக்கு நேர் மாறானவர்கள் இத்தகையோர்). ஆனாலும், காலம் இவர்களின் தவறுகளைக் களையாமல் விடப்போவதில்லை என்பது உறுதி.
இறுதியாக, தில்லை மரம் குறித்துச் சங்கப்பாடல்களில் காணக்கிடைக்கும் செய்திகள் சில:
  • குறிஞ்சிநிலத்து மகளிர் குவித்து விளையாடிய தொண்ணூற்று ஒன்பது மலர்களில் தில்லை மலரும் ஒன்று. இது மணம் வீசும் மலர். இதன் மரம் ‘தளதள’வெனத் தழைத்திருக்கும். பெரிதாக இருக்கும்.
  • நீர்நாயின் குருளை (குட்டி) மீனை மேய்ந்தபின் தில்லையம் பொதும்பில் (ஆற்றோரக் காடுகளில்) பள்ளி கொள்ளுமாம்.
  • தில்லை மரங்கள் ஊருக்கு வேலியாக அமைவது உண்டு.
  • உப்பங்கழிகளில் முண்டகமும் தில்லையும் ஓங்கி வளரும்.
  • தில்லைக் காய்கள் முனிவர்களின் சடைமுடி தொங்குவது போலக் காய்த்துக் குலுங்கும். புது வெள்ளம் கொட்டும் அருவியில் குளித்துக் குளித்து அவர்களின் தலைமுடி சடை போட்டுவிடுமாம்.
ஆய்வுகள் தொடரும்…