Monday 8 August 2016

சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-2)

சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-2)
பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன்
சென்ற பகுதி-1ல் ‘பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது ஒரு தனியடியாரையே குறிக்கும், தொகையடியாரை அல்ல என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவப்பட்டது; அத்தனியடியார் ஏன் மாணிக்கவாசகராக இருக்கவேண்டும் என்பதற்கான பொய், மெய்  என்பதுகுறித்த கருதுகோள்களின் தொடக்கநிலை அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து மேலும் சிந்திக்கலாம்.
மன்னுயிர் என்பது அழிவில்லாத உயிரே
மண்ணோடு மண்ணாக மறைந்தொழியும் இந்த மனித உடலை நாம் என்றும் உள்ளது என்று பொருள்படும் மெய் என்ற சொல்லால் அழைக்கின்றோம். ஒருவருடைய ‘Body Guard’-ஐ தமிழில் மெய்க்காப்பாளர் என்று அழைக்கின்றோம். இதை ஏன் இவ்வாறு சொல்லும் வழக்கம் வந்ததென்று சிந்திக்கலாம்.
மனித உடல் அழியக்கூடியதே. ஆயினும், அதனுள் என்றும் உள்ளதான அறிவுப் பொருளாகிய ‘உயிர்’ இணைந்துள்ளது. இதற்கு ஆதாரம் சங்ககாலம் தொட்டு வழங்கிவரும் தமிழ்க் கவிதைகள் உயிருக்கு வழங்கியுள்ள ‘மன்’ என்னும் நிலைபேற்றுக்குறிப்பு முன்ஒட்டு. தமிழில் ‘மன்’ என்பதற்கு ‘என்றும் உள்ளது’ என்று பொருள். காட்டாக, சில பாடல்களைக் காண்போம்.
மன்னுயிர்: இலக்கியச் சான்றுகள்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. -திருக்குறள்:244
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் செய்பவனுக்குத் தன் உயிரைப் பற்றிய அச்சம் தரும் வினைகளைக் குறித்த கவலை இல்லை; ஏனெனில், அத்தகைய அருளாளனின் வினைகளை இறைவனே நீக்கியருள்வான் என்பது தொக்கி நிற்கும் கருத்து.
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்.  (மணிமேகலை – 25:228-231)

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது     -இனியவை நாற்பது:பூதந்சேந்தனார்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. – திருக்குறள்:68

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பல்தலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாகுமே. – திருமந்திரம்:2018
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.  – திருக்குறள் 457

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. -திருக்குறள்:1168

“எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, இந்த இரவு,  என்னைத் தவிர வேறு துணை இல்லாமல் இருக்கின்றதே! ஐயோ பாவம்!!” என்று நேர் பொருள் தருகிறது இத்திருக்குறள். மிக நுட்பமான தனிமைத் துயரையும், பிரிவின் வேதனையையும் உணர்த்தி நிற்கும் அற்புதமான அகப்பொருள் புதைந்து கிடக்கும் குறள். இப்போது ‘மன்னுயிர்’க்கு வருவோம்.
அழியும் பொய்யுடலை ஏன் ‘மெய்’ என்கின்றோம்?
மெய்யனான இறைவனும், என்றுமுள்ள நிலைப்பேறு பெற்ற உயிரும் உள்ளே உறைவதால், அழியும் தன்மையுள்ள,பொய்யான ஊன் உடம்பை  மெய் எனத் தமிழர் காலம் காலமாக அழைத்துவருகின்றனர். ஆணவம் என்னும் அறியாமையில் அழுந்திக் கிடக்கும் என்றுமுள்ள உயிர்களின்பால் கொண்ட பெருங்கருணையினாலேயே  அவர்தம் அறியாமையைப் போக்கும்வண்ணம் பார்த்தல், கேட்டல் முதலிய ஐந்து புலன்களையும், அதற்கான கண், காது முதலிய ஐந்து பொறிகளையும், ஒன்பது வாயில்களையும் பெற்ற ஊனுடம்பில் உயிரை இறைவன் புகச் செய்கின்றான்; இறைவனும் அவ்வுடலில் உறைகின்றான்.
உயிரில் நுழைந்து உடலில் புகுந்த இறைவன்!
இவ்வுயிர் உலகுக்கு வருமுன்பே அதனுள் நின்றவன் இறைவன். இதை மணிவாசகப் பெருமான்
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக்
கருத் திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே   திருவாசகம்:கண்டபத்து:1    
என்று தில்லையில் அருளிய கண்டபத்தில் கூறுகின்றார். உருத்தெரியாக்காலம் என்கிறாரே பெருமான் அது என்ன? ‘ஆன்மா’ என்று வடமொழி கூறும் ‘உயிர்’ பிறவிக்கு வரும்முன்பே அதனுள் நின்றவன் இறைவன். அதனால்தான்,வினைப்பயனுக்கு ஏற்ப, இன்ன ஆன்மா இந்த உடலில் புகவேண்டும் என்பதைத் தீர்மானிப்பவனும் இறைவனே ஆவான்.
உயிர் எப்போது இறைவனை அறியும்?
உடனுறையும் இறைவனை, வினைப்பயனால் கிடைத்த உடல்கருவியின் துணை கொண்டும், குருமார்களின் இறையனுபவப் பிழிவாகப் பெறப்பட்ட திருமுறைகள் மூலமும் உயிர்கள் அறியும்போது, இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவான். பிறவித்தளைகளாம் வினைகளை நீக்கி ஆட்கொள்வான்.
மணிவாசகரைக் கருவிலேயே திருத்தி ஆண்டுகொண்ட திறம்
அத்தகைய பெறுவதற்கு அரிய இறைவன், உருத்தெரியாக் காலத்திலேயே மணிவாசகரின் உயிரினுள் புகுந்தவன், அவரின் உள்ளத்திலும் ‘மன்’னினானான், அதாவது, உள்ளத்திலும் நிலையாக அமர்ந்துவிட்டான் என்கிறார் மணிவாசகர். (மன் –நிலைப்பேறு; மன்னி – நிலையாக). மனிதகுலம் உய்யத் திருவாசகம் தரப்போகும் அற்புதமான உயிர் தங்கப்போவதால்,அந்தக் கருவை கூன், குருடு, செவிடு போன்ற குறைகள் இல்லாமல் திருத்திய பின்னரே, மணிவாசகரின் உயிரை அக்கருவினில் புகச் செய்து, தானும் புகுந்துகொண்டு, தகுந்த பக்குவம் எய்திய காலத்தில் கருணையினால் ஆண்டு கொண்டான் இறைவன்.
ஊனுக்குள் ஒளிந்த இறைவன்
ஆயினும், பெரும்பாலும், உயிர்கள் தம்அறியாமை காரணமாய், உடனுறையும் இறைவனை அறிவதில்லை. இறைவனை வானில் தேடி அலைகின்றனர். அவர்களின் மதியின்மையைக் கண்டு வருந்திய திருமூலதேவ நாயனார் மனிதர்களிடம் கூறுகின்றார் – “தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
கூறமுடியுமா? எப்படி தேனுக்குள் இன்பம் உள்ளுறையாக செறிந்திருக்கின்றதோ, அதுபோல் உங்கள் ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான்” என்று.
தேனுக்குள் இன்பம் கறுப்போசிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”   –திருமூலர் திருமந்திரம்.

உயிரை வளர்க்கும் வழி
உடம்பு அழியுமானால், உயிர் அறியாமை நீங்காது கேவல நிலையில்(coma) அழுந்திக் கிடக்கும். கிடைத்த உடல் பிறவியை இழந்ததால், மெய்ஞானம் உயிருக்குக் கிடைக்காது. ஆகவே, உடலை நல்லமுறையில் வளர்ப்பதே உயிரை வளர்க்கச் சிறந்த வழியாகும் என்கிறார் திருமூலர்..
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. திருமூலர் திருமந்திரம்.

அது மட்டுமல்ல, இவ்வுடம்பினுள் இறைவன் கோயில் கொண்டிருப்பதால், உடலை நான் பேணுகிறேன் என்கிறார்.

“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே” – திருமூலர் திருமந்திரம்.
மீண்டும் மீண்டும் பிறப்பது ஏன்?
இறைவனைச் சாட்சியாக உடனுறைவது அறியாமலேயே, உயிர்கள் நல்லதும், கெட்டதும் ஆன நல்வினை, தீவினைகளைச் செய்கின்றன. அவைகளின் பயனாக பல்வேறு உடல்களில் பிறவிகள் பெறுகின்றன. உயிர்கள் உடல் பிறவிகள் பெறுவது வினைகளின் பயனாய் வந்த விதி. ஆயினும், அவ்வுடல் பிறவிகளில் இறைவனும் உடன் வருவதற்கு அவனுக்கென்ன தலையெழுத்து?
இறைவன் அவ்வாறு உடலுடன் உறைகிறான்?
இறைவன் அவ்வாறு உடலுடன் உறைவது தம்மிடத்துக் கொண்ட பெருங்கருணையினாலே ஆகும் என்பதை உயிர் அறிந்து,தன்னுடன் உறையும் மெய்யனான இறைவனைக் கண்டுகொண்டால், பொய்யான ஊனுடம்பு உயிருக்குத் தேவையில்லாமல் போய்விடுகின்றது. பிறவித்தளையின் பிடியிலிருந்து இறைவனின் கருணை என்னும் தெப்பத்தின் துணையால் விடுபட்டு,இறைவனோடு இரண்டறக் கலந்து நிலைத்த, மெய்யான பேரின்பநிலையை உயிர் அடைகின்றது. இங்கு, உடம்பு என்பது,உடம்பின் தொடர்புகொண்ட இவ்வுலகையும் சேர்த்துக் குறிக்கும்.
மாணிக்கவாசகர் உடல்வாழ்வை வெறுத்தது தவறா?
நமக்கெல்லாம் அடுத்து வரும் ஐயம் திருமூலர் உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று உடம்பைப் பேணச் சொல்கின்றார்; மாணிக்கவாசகர் ‘உண்டு உடுத்து வீணே இருந்தேனே என்று வருந்துகின்றார். இவை முரண் கருத்துக்களா என்பதுதான்.
இல்லை என்பதுதான் பதில். உயிருக்கு இறைவன் ஊனும்பு வாழ்வு தருவதும், உயிருடனே ஊனும்பில் இறைவனும் உறைவதும் உயிரைக் கடைத்தேற்றுவதற்குத்தான். எனவே, இறைவனின் திருவடிப்பேறு பெரும் தகுதி அடையும் காலம்வரை உயிருக்கு உடல் தேவையென்பதால், உடம்பைப் பேணவேண்டும்.
திருவடிப்பேறு பெற்றபின், இறைவனிடமே இரண்டறக் கலந்து நிலைப்பேறு பெற்று வாழும் வாய்ப்பைப் பெற்ற மணிவாசகருக்கு, ஊனுடம்பு தேவையில்லை; ஆயினும், அது தொடர்வதால், உண்டு உடுத்து வீணே இருந்தேனே என்று வருந்துகின்றார் பெருமான். உலக இன்பங்களைத் துய்ப்பதற்காக உண்டு, உடுத்தி வாழும் குறிக்கோளற்ற வாழ்க்கையே வீண்வாழ்க்கை.
மாணிக்கவாசகர் ஏன் உடல்வாழ்வை வெறுத்தார்?
மாணிக்கவாசகாரின் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தமாகிய தேனினைச் சொரிந்து,பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து அவர்பின் புறம் புறம் திரிந்து, அருளினைச் சொரிந்த சிவபெருமான்,அவரைவிட்டு நீங்கியதால் வந்த பிரிவாற்றாமையினால் வருந்திப் பாடிய பாடல்களிலே ஊனுடம்பு வாழ்வை வெறுத்துப் பாடுகின்றார் பெருமான்.
திருவாசகம் பிறக்க இறைவன் செய்த திருவிளையாடல்
மாணிக்கவாசகருக்கு அவர்தம் பொய்யுடல் வாழ்க்கையிலேயே மெய்யனான இறைவன் மறைபயில் அந்தணனாக ஆண்டுகொண்ட உடன் இறையனுபவம் பெற்றார்; வினைகள் முற்றிலும் நீங்கின ஆயினும், மனிதகுலத்திற்குத் திருவாசகம் தரவேண்டி, இறைவனின் அருள் என்னும் துணைகொண்டு மாணிக்கவாசகரின் உடல் வாழ்வு நீடித்தது.உடல் வாழ்வு வேண்டாப் பொய்யடிமை நீங்கிய மணிவாசகரிடமிருந்து உலகம் உய்யத் திருவாசகம் பிறந்தது.
மணிவாசகர் பொய்யடிமையில்லாப் புலவராகியவர் இறைவனே
இதை நிகழ்த்த இறைவன் மணிவாசகரிடமிருந்து நீங்கினான். பிரிவாற்றாமையினால் துயருற்ற மாணிக்கவாசகர் தாம் பெற்ற இறையனுபவங்களைத் திருவாசகமாக அருளினார். ஒவ்வொரு வாசகத்திலும் மாணிக்கவாசகரின் பொய்யடிமையில்லாப் தன்மை அவர் புலமையில் முகிழ்த்த பாடல்களில் சுடர்விட்டு ஒளிர்ந்தது. திருவாசகத் திருமுறையில்  47 முறை பொய்’-மையைப் குறித்த பதிவுகள் காணக்கிடைக்கின்றன.
இதுவே, ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் என்ற சிறப்புப் பெயருடன் மாணிக்கவாசகரைச் சுந்தரமூர்த்தி நாயனார் தனியடியாராகத் திருத்தொண்டர் தொகையில் பாட வைத்தது என்று கொள்வதில் தவறில்லை.
இவ்வாறு சுந்தரமூர்த்தி நாயனாரால் அடையாளம் காட்டப்பட்ட ‘பொய்யடிமை இல்லாத  புலவர்’ குறித்து சேக்கிழார் பெருமான் விரித்துரைக்கும்
செய்யுள் நிகழ் சொல் தெளிவும், செவ்விய நூல் பல நோக்கும், மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி, ஒளிர் மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார், பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்
என்ற புகழுரைக்கு உரியவரும், சேக்கிழார் பெருமானால் மேலும்
‘பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமைஅல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டுநெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் மற்றவர் தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள்
என்ற மெய்கீர்த்திக்கு உடையவரும் மாணிக்கவாசகப் பெருமானே என்பதை அவர் வாக்குகளான அகச்சான்றுகளில் இருந்து இங்கு விரிவாகக் காணலாம்.
திருவாசகச் சான்றுகள்
மணிவாசகப் பெருமானே பொய்யடிமை இல்லாத புலவர் என்பதற்கான அகச்சான்றுகள் திருவாசகத்தின் நாற்பத்தொரு பாடல்களில் 47 முறை அவர் பொய் என்ற சொல்லை எடுத்தாண்ட வகைகளில் விரிவாகப் பரந்து காணக் கிடைக்கின்றன.
பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை1
இறைவனின் பொற்பாத மலர்களைக் காணாதோர் எல்லோரும் பொய்யர்கள் என்ற வரைவிலக்கணம் திருவாசகத்தின் திருச்சதகத்தின் 52-ம் பாடலில் அழகுற மிளிர்கின்றது.
முதல் இரண்டு வரிகளில் மணிவாசகப்பெருமான் தன்னை “இறைவனின் பொற்பாத மலர்களைக் காணாத பொய்யர்கள் என்ன என்ன துன்பப்பேறுகளைப் பெறுவார்களோ, அத்தனை துயரங்களையும் பெறுதற்கு உரியவனாவேன்” என்று சபித்துக் கொள்கின்றார். அவ்வரிகள் இதோ:
செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன்
இப்பாடலில் பெருமான் தன்னை “பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்” என்று ஏன் நொந்து கொள்கின்றார் என்று சற்று நுட்பமாகப் பார்த்தோமேயானால், வியத்தகு உண்மைகள் புலனாகின்றன. இவ்வுலகினர் பெரும் பொருட்செல்வம் கிடைத்தாலோ, பதவி கிடைத்தாலோ, “கிடைத்தற்கரிய பேறு” கிடைத்ததாக மகிழ்வர். அவை நிலையற்றவை என்று நினைக்க மாட்டார்கள்; கால ஓட்டத்தில் அவை கரைந்துவிடுபவை என்று உணரமாட்டார்கள். இதற்காக அவர்களைக் குறைகூற ஒன்றுமில்லை. ஏனெனில், அவர்கள் இறைவனின் திருவடிப்பேறு என்னும் பேரானந்தம் அநுபவித்தவர்கள் அல்லர்; தானோ இறைவனின் திருவடிப்பேறு பேரின்பவெள்ளத்தில் குளித்தவன்; இருந்தும், ஏனைய உலகினரைப்போல் பக்குவமற்ற மனநிலையில் உள்ளதாக உணர்வதால் அவ்விதம் பாடியுள்ளார்.
மணிவாசகப் பெருமான் நொந்து பாடிய காரணம்
சிவபெருமான் திருவடிப்பேறு நல்கி மணிவாசகரை ஆட்கொண்டான்; ஆகவே, மணிவாசகருக்கு ‘மெய்யர்’ என்னும் தகுதி சிவபெருமானால் வழங்கப்பட்டுவிட்டது. ஆயினும், அத்தகுதிக்கு உரிய பண்புநலன்கள் தன்னிடம் இல்லை என்று பதைக்கின்றார். ஏன்?
ஏனெனில், திருவடிப்பேறு பெற்ற பொய்யிலா மெய்யடியார்கள் சிவபெருமானின் மணம்பொருந்திய திருவடிகளையே மேவி நிற்றலைக் கண்ணால் கண்டிருந்தும், முன்பே கேட்டிருந்தும், தான் அவ்விதம் நடக்காமல், பொய்யான ஊனுடம்பைப் பேணும் வண்ணம் தான் நல்ல உணவுகளை உண்டும், அழகான உடைகளை உடுத்தும், ஏனைய உலகியல்வாழ் மக்களைப்போல் இவ்வுலகில் களிப்படைந்து வாழ்வதால், தன்னைப் ‘பொய்யனேன்’ என்று நொந்துகொள்கின்றார். அவ்வரிகள் இதோ:,

பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. திருச்சதகம்:52

பொய் நீக்கிய பேரருளாளன் இறைவன்
தகுதியில்லாத தனக்குத் திருவடிப்பேறு நல்கி, தன்னுடைய பொய்யெலாம் நீங்கும்படிக்கு, இறைவன் மெய்யனாய்த் தன்னை வெளிக்காட்டி ஆண்டுகொண்ட அதிசயத்தை ‘அற்புதப்பத்து’ப் பதிகத்தில் மூன்று திருவாசகப் பாடல்களில் வியந்து பாடியுள்ளார் அடிகள். அவை இங்கே தரப்பட்டுள்ளன:
மையலாய் இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டுத்
தையலார் எனும் சுழித்தலைப்பட்டு  நான் தலை தடுமாறாமே
பொய்யெலாம் விடத் திருவருள் தந்து தன் பொன்னடி இணைகாட்டி
மெய்யனாய் வெளிகாட்டி முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே
திருவாசகம்:41 அற்புதப்பத்து  1
மேற்கண்ட திருவாசகத்தின் உட்பொருள் : ‘இவ்வுடலே நான்’ என்னும் மயக்கவுணர்ச்சியுடையவனாய், இந்த மண்ணுலக வாழ்வு என்கிற கடலில் அகப்பட்டு, பெண்ணின்பம் என்கிற சுழலிலே சிக்கி, நான் நிலைகுலைந்து போகாமல் எங்கள் பெருமான், உண்மைப் பொருளாய்த் தோன்றி, தனது அழகிய திருவடிகள் இரண்டையும் யான் காணும்படி காட்டி,பொய்ப்பொருளெல்லாம் விட்டு நீங்கும்வண்ணம், திருவருள் புரிந்து, ஞான ஒளியைக் கொடுத்து, என்எதிரே நின்றதாகிய,ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேன் அல்லேன் என்கின்றார் பெருமான்.
மருள் மயக்கம் தரும் பிறப்பு
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.  திருக்குறள்: 351
இப்பிறப்பு பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் மயக்கத்தைக் கொடுக்கின்றது என்ற வள்ளுவரின் வாக்கு இங்கு சிந்திக்கத்தக்கது.  மெய்ப்பொருளாகிய இறைவன் மயக்கத்தைச் செய்கின்ற வாழ்வாகிய கடலைக் கடத்தற்குத் திருவடியாகிய தெப்பத்தைக் கொடுத்து, தெளிவைத் தருகின்ற ஞானமாகிய கரையில் ஓடக்காரனாக நின்று நம்மைக் கரைசேர்க்கிறான்.  நம் அஞ்ஞானத்தை அகற்றியதை பொய்யெலாம் விடத் திருவருள் புரிந்து என்றும், ஞானத்தை அருளியதை வெளிக்காட்டி‘ என்றும் குறித்தார் மணிவாசகப் பெருமான்.
இல்லறவாழ்வு தவறா?
இப்போது நம்மிடை இரண்டு ஐயங்கள் எழுகின்றன. அவை, இவ்வுலகவாழ்வு பொய்வாழ்வு என்றால் ஏன் அதை நாம் வாழ வேண்டும்? ஆணுக்குப் பெண்ணின்பமோ, பெண்ணுக்கு ஆணின்பமோ தவறா? என்பதாகும். இவ்வுலக வாழ்வும் இல்லற இன்பமும் ஒவ்வொரு உயிருக்கும் மிகத்தேவையானவையே! இறைவனே அம்மையப்பனாக, மாதொரு பாகனாகவும் அல்லவா நமக்கு வழிகாட்டுகின்றான்! அங்ஙனமானால், பெருமான் ஏன் இவ்வாழ்வைப் ‘பொய்வாழ்வு’ என்கிறார்?
அமுதமும் நஞ்சும்
உணவு’ உண்ணும்போது உயிர்காக்கும் அமுதம். தேவையானவைகளை உடல் செரித்துக்கொண்டபின் எஞ்சியவை மலங்களாகிய நஞ்சாம். உணவில் எஞ்சிய மலங்களே, காலத்தில் நீங்காவிட்டால், உடலுக்கு நஞ்சாவது போல, ஞானம் பெற்ற உயிருக்கு உடல் நீக்கப்படவேண்டிய மலமாகிறது. உடல்வாழ்வின்றி உயிர்கள் இறைவனை அறியா. இல்லறத்தின் வழியே அனைத்து உயிர்களுக்கும் இறைவன் உலகவாழ்வை நல்க கருவி,கரணங்களுடன் கூடிய உடலைப் படைத்துத் தருகின்றான்.
உடல் எப்போது வேண்டியதில்லை?
உடல்வழி புறஉலகை அறியும் உயிர், தன் ஆறாவது அறிவாம் ஞானத்தினால் இறைவனை உணர்ந்தவுடன் இவ்வுடலுக்கான தேவை முடிந்து விடுவதால், இவ்வுடல் தேவையற்ற மலமாகின்றது. ஞானம் பெறாவிட்டாலும், காலமுடிவில் உடல் அழியும்போது பிரிந்த உயிரின் வினைப்பயன்களுக்கு ஏற்ப, இறைவன் அடுத்தடுத்தபிறவிகளைத் தருவது மட்டுமல்ல, அவ்வுயிர் தன் இலக்கான இறைத்திருவடிப்பேறு பெறும் தகுதி அடையும் வரை உயிருடன் இறைவனும் தொடர்ந்து பயனிக்கின்றான்.
நள்ளிருளில் நட்டம் – இறைவனின் பேரன்பு
உயிர்கள் நல்வினை, தீவினைகள் செய்து, இருளில் பயணம் செய்யும்போது, ஊனுடம்புக்குள் ஒளிந்து இடைவிடாது அவைகளை தன் மறைப்புச் சக்தியால் செயல்பட வைக்கின்றான். இதையே, மாணிக்கவாசகப் பெருமான்
“நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே!” என்று சிவபுராணத்திலும்,
அப்பர் பெருமான் அருளிய ஆறாம் திருமுறை 95வது தனித் திருத்தாண்டகப் பதிகம் 3ம் பாட்டிலே
‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பார் ஆர்? கண்ணுதலாய் காட்டாக் காலே. –அப்பர் தேவாரம்:6.95.3
என்று நெற்றிக்கண் இறைவன் (கண்ணுதலான்) அறிவிக்காவிட்டால் அறிதலாகிய ஞானம் பெறுபவர் யார்? என்று கேள்வியையே பதிலாகத் தருகின்றார். (வினாவிடை:காட்டாக்காலே காண்பார் ஆர்?)
இதே கருத்தை மற்றிரண்டு கோணங்களில் காடும் இன்னும் இரண்டு அற்புதத் திருவாசகப் பாடல்களையும் இங்கே சிந்திக்கலாம்.
அடித்து அடித்து இன்சுவை சர்க்கரை புகட்டிய அற்புதம்
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நான்எனது எனும் மாயக்
கடித்த வாயிலே நின்று முன்வினை மிகக் கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்ற பெருமறைதேடிய அரும்பொருள் அடியேனை
அடித்து அடித்து அக்காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே
திருவாசகம்:41 அற்புதப்பத்து – 3
மண்ணுலகத்தில் உண்மையுள்ளவன் போல நடித்து, முற்காலத்துச் செய்த வினையாகிய விடமானது மிகுதலால் நான், எனது என்னும் மாயப் பாம்பின் தன்முனைப்புக் கடித்த தூண்டுதலால் பொய்யான பல காரியங்களைச் செய்து, புலம்பித் திரிகின்றவனும், தனக்கு அடியவனுமாகிய என்னை, அந்தப் பெரிய வேதங்களும் தேடியறியாத, அரிய பொருளான எங்கள் பெருமான், முன் வந்து பிடித்துக்கொண்டு, அடித்து அடித்து, திருவருளாகிய சர்க்கரைக்கட்டியை புகட்டிய அற்புதம் அறியேன் என்கின்றார் பெருமான்.
மாயையாகிய பாம்பினால் வந்த வினைகளான நஞ்சை நீக்க, இறைவனாகிய விடவைத்தியன் திருவருளாகிய இனிய மருந்தினை நல்கியதை, ‘அரும்பொருள் அடித்தடித்து அக்கார முன் தீற்றிய அற்புதம்’ என்றார். இதனால், இறைவன் திருவருள் கிட்டும்போது, யான் எனது என்னும் மாயச் செருக்கு நீங்கும் என்பது குறிப்பாக உணர்த்துகிறார் பெருமான்.
அருந் துணைவனாய் ஆண்டுகொண்டருளிய அற்புதம்
பொருந்தும் இப்பிறப்பு இறப்பு இவைநினையாது பொய்களே புகன்றுபோய்க்
கருங்குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே
அருந் துணைவனாய் ஆண்டுகொண்டருளிய அற்புதம் அறியேனே
திருவாசகம்:41 அற்புதப்பத்து – 4
வினைக்கேற்ப மாறிமாறிப் பொருந்துகின்ற இப்பிறப்பு இறப்புகளாகிய எண்ணற்ற பிறவிகளின் துன்பநிலையை எண்ணாது, பொய்களையே சொல்லித்திரிந்து, கருங்கூந்தலையுடைய பெண்களின் வேல்விழிகளால் வீழ்த்தப்பட்டுக் கலங்கிக் கிடப்பவனான என்னை, உமையம்மையோடு நீங்காத எங்கள் பெருமான், தம் வடிவுடைய திருவடிகளின் சிலம்புகள் ஒலித்திட , எனக்கு அருந்துணைவனாய்த் தோன்றி ஆண்டுக்கொண்டருளிய அற்புதச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.
‘அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை’ என்ற திருநாவுக்கரசர் வாக்கு இங்கு நினைக்கத் தக்கது.
இதனால், தகுதிக் குறைபாடு இருந்தாலும், திருவடிப் பேற்றை அன்பினால் உருகி வேண்டும் அடியவர்களுடைய பொய்மையை நீக்கி, பிறப்பு இறப்புகளைப் போக்க அருள்பவன் இறைவன் என்பதை அறிகின்றோம்.
‘பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை–2
நிலையில்லாத இவ்வுடல் உலகியல் வாழ்க்கையையே மெய்யென மயங்கி, நிலையற்ற இவ்வுலகில் வாழும் வாழ்வு இங்கு ‘பொய்’ எனும் பொருளில் மணிவாசகப் பெருமானால் காட்டப்பெறுகின்றது.
“பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே”
திருவாசகம்:1 சிவபுராணம் 37– 38)
இங்கு, ‘பொய்யாயின எல்லாம்’ என்பவை நிலையில்லாதவைகளும், தீங்கு பயப்பனவைகளும் ஆன இவ்வுலக இன்பங்களிலேயே வைக்கும் கடும் பற்று ஆகும். அத்தகைய பொய்யாயினவற்றில் செல்லும் கடும்பற்று எல்லாம் போய் அகல, மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராக இறைவன் வந்து அருளுகின்றான் என்று உரைக்கின்றார் பெருமான்.
“வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம்ஐயா அரனேஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்”
திருவாசகம்:1 சிவபுராணம்:1(84– 86)
‘குழந்தை உருவம் தொடங்கி வேறு வேறு திரிவுபாடுகளைஎல்லாம் அடைந்த தசையாலான நிலையற்ற பொய்யுடம்பில் இனி வாழ மாட்டேன், நிலையான மெய்ப்பொருளாகிய இறைவனைப் போற்றிப் புகழ்ந்திருந்து நிலையில்லாத பொய்யுடம்பான பொருளல்லவற்றைப் பொருளென மயங்கும் நிலை இறையருளால் நீங்கிவிட்டமையால், பொய்யுடம்புக்கான தேவை இல்லை; ஆகவே, பொய்கெட்டு மெய்யானார்’ என்கின்றார் பெருமான்.
இன்னும் இரண்டு வரையறைகளை அடுத்த நிறைவுக் கட்டுரையில் காண்போம்.
—————————————————————-

No comments:

Post a Comment